11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நவீன வானிலை ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசு ரூ.920 கோடி ஒதுக்கி உள்ளது.
இந்தியாவில் வானிலை மாற்றம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு திருச்சியில் இன்று நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் டாக்டர் ஆர்.வி.சர்மா கூறுகையில், இந்தியாவில் உள்ள எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் தானியங்கி வானிலை ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்.
அதேபோல் ஒவ்வொரு மாவட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில் தானியங்கி மழை பொழி அளவு மானி அமைக்கப்படும்.
தற்போது வானிலை ஆய்வு மையங்களில் உள்ள ரேடார்களுக்கு பதிலாக டூப்லர் ரேடார்கள் அமைக்கப்படும்.
அடுத்து இரண்டு வருடங்களில் வானிலை ஆய்வு மையங்கள் தானியங்கி முறையாக மாற்றப்படும்.
2100ம் ஆண்டில் உலக வெப்பம் 1.4 டிகிரி செல்சியஸ் முதல் 5.8 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நாடுகளுக்கு இடையேயான வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்று சர்மா கூறினார்.