மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் நேற்றிரவு ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்தது.
பலத்த மழை காரணமாக தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான இடங்களில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது.
மதுரை நகரில் 95.4 மி.மீ. மழையும், சாத்தையாறு அணையில் 105 மி.மீ. மழையும் பெய்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற இடங்களான மேட்டுப்பட்டியில் 39 மி.மீ., ஆண்டிப்பட்டி 38 மி.மீ., குப்பனாம்பட்டி 31.3 மி.மீ., சோத்துப்பாறை அணை 25 மி.மீ., பெரியார் அணை 26 மி.மீ., வைகை அணை மற்றும் உத்தமபாளையத்தில் தலா 24 மி.மீ., வீரபாண்டி 23 மி.மீ., கல்லந்திரி 18.4 மி.மீ., பேரணை 18மி.மீ., தேக்கடி 17 மி.மீ., மஞ்சளாறு 10 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
பெரியார் அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக (அதிகபட்ச கொள்ளவு 136 அடி) உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,434 கன அடியாகவும், அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவு வினாடிக்கு 1,424 கன அடியாகவும் இருந்தது.
வைகை அணையின் நீர்மட்டம் 65.62 அடியாக (அதிகபட்ச கொள்ளவு 71 அடி) உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,111 கன அடியாகவும், வெளியேறும் நீரின் அளவு வினாடிக்கு 41 கன அடியாகவும் இருந்தது.