மின்வேலியில் சிக்கி 3 பேர் இறந்த வழக்கு: 3 பேருக்கு 7 ஆண்டு சிறை!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
கோபிச்செட்டிப்பாளையம் அருகே பயிருக்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 3 பேர் இறந்த வழக்கில் நில உரிமையாளர்கள் 3 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ளது பங்களாபுதூர். இந்த கிராமத்தின் அருகே உள்ள தேன்கரட்டை சேர்ந்தவர் மாதையன் (40). இவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் அழகப்பன் (55). இவர்கள் தங்கள் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை பாதுகாக்க சுற்றிலும் மின்வேலி அமைத்து நேரடியாக மின்சாரத்தை செலுத்திவிட்டனர்.
அப்போது கிராமத்தில் திரைப்படம் பார்த்துவிட்டு குறுக்கு வழியில் வந்த மூர்த்தி (21), மாதேஸ் (23) ராமசாமி (40) ஆகிய 3 பேரும் மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி நடந்தது.
இந்த வழக்கு ஈரோடு முதன்மை கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று மாலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணன் , நில உரிமையாளர்கள் மாதையன் அவரது மனைவி வேணி மற்றும் அழகப்பன் ஆகிய மூவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.