தமிழகத்தில் சுகாதாரத் துறை மிகவும் கவலை அளிக்க கூடிய நிலையில் உள்ளதை நிரூபிக்கும் வகையில் தடுப்பூசி மரணம், பார்வை இழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன'' என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் சுகாதாரத் துறை மிகவும் கவலை அளிக்க கூடிய நிலையில் உள்ளதை நிரூபிக்கும் வகையில் 2 நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டதில், அவர்கள் கொடூரமான முறையில் மரணமடைந்துள்ளனர்.
இப்போது, பெரம்பலூர் பகுதியில் இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுமார் 29 பேர் பார்வை இழந்துள்ள அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் விசாரித்து கொண்டிருக்கும்போது, மேலும் 36 பேர் பார்வை இழந்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமல் இது போன்ற முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவமனைகள் அதிகமாகவும், அரசு மருத்துவமனைகள் மிகக்குறைவாகவும் உள்ள தமிழகத்தில், மக்களின் அடிப்படை தேவைகளை சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு.
ஆனால், ஒவ்வொரு முறையும் பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு நிதி உதவி அளிப்பதும், பின்னர் நிபுணர் குழு அமைத்து காரணங்களை ஆராய்ச்சி செய்வதும் எந்த வகையில் சரியானது? மக்களுக்கு ஏற்பட்ட இதுபோன்ற பாதிப்புகளுக்கு தமிழக அரசு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.