''
பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்கும் தனியார் நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி மாநில அரசு நடவடிக்கை எடுப்பதோடு அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் உறவு வைத்துக் கொள்ளும் எந்த கட்சியுடன் இடதுசாரி கட்சிகள் கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இடம்பெறாது. எந்த கூட்டணியில் இடம்பெறுவது என்பது குறித்து தேர்தல் சமயத்தில் கூடி முடிவெடுக்கப்படும்.
தி.மு.க அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போது முடிவு எதுவும் செய்யவில்லை. நாடாளுமன்ற தேர்தல் குறித்து மட்டும் தான் நாங்கள் பேசியிருக்கிறோம். நாடாளு மன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு.
தமிழகம் மீனவர்களை இனி சிறிலங்க கடற்படை தாக்காது என்று இலங்கை அரசு கூறியிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதை சிறிலங்க அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற ஒரு சூழ்நிலை தற்போது உள்ளது. பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்கும் தனியார் நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி மாநில அரசு நடவடிக்கை எடுப்பதோடு அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தா.பாண்டியன் கூறினார்.