பலத்த மழையால் புதுக்கோட்டை அருகே வீட்டுக் கூரை இடிந்து விழுந்து ஐந்து வயது குழந்தை உள்பட இரண்டு பேர் பலியானார்கள். மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்தவர் முனுசாமி (48). இவர் நேற்றிரவு மனைவி ராஜலட்சுமி (41), மகள்கள் கல்யாணி (11), அபிராமி (9), ஐந்து வயது மகன் சாத்தப்பன் ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் முனுசாமியின் வீட்டு கூரை இடிந்து விழுந்தது. அப்போது, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்து ராஜலட்சுமி, அவரது மகன் சாத்தப்பன் ஆகியோர் இடிபாடுகளுடன் சிக்சி உயிரிழந்தனர்.
மேலும் முனுசாமி மற்றும் அவரது இரண்டு மகள்களும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.