தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி அமைப்புகளுக்காக நடந்த தேர்தலில், வேட்பு மனு தாக்கல் செய்யாமல் விட்டது, இறப்பு, பதவி விலகல், பதவி நீக்கம், தகுதியின்மை போன்ற காரணங்களால் பல்வேறு பதவி இடங்களில் காலி ஏற்பட்டுள்ளன. அந்த இடங்களில் செப்டம்பர் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும். வேட்புமனு தாக்கல் 27ஆம் தேதி தொடங்குகிறது.
காலியாக உள்ள 679 இடங்களில், ஊரக உள்ளாட்சி பதவி இடங்கள் 626, நகர்ப்புற பதவி இடங்கள் 53. வேட்பு மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 4 கடைசி நாள்.
பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிடுவோர் ரூ.200 டெபாசிட் செலுத்த வேண்டும். தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் ரூ.600, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ரூ.600, மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ரூ.1,000, பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் ரூ.500, நகராட்சி வார்டு உறுப்பினர் ரூ.1,000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் ரூ.2,000 டெபாசிட் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் இதில் 50 விழுக்காடு செலுத்தினால் போதும்.
இடைத்தேர்தலின் போது பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் 29ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. சென்னை மாநகராட்சி வார்டுகள் 18, 44, மதுரை மாநகராட்சி வார்டு 52 ஆகிய இடங்களில் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் மேற்கண்ட 3 இடங்களில் ஆய்வு செய்வார்கள்.
இடைத்தேர்தலுக்காக மொத்தம் 1,246 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஊரகப் பகுதிகளில் 1,152, நகர்ப்புறத்தில் 94 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மதுரை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறினார்.