தி.மு.க அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறவில்லை. ஆனால் அக்கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து முரண்பட்டு நிற்கிறோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் ரீதியாக தி.மு.க.வில் இருந்து நாங்கள் மாறுபட்டு நிற்கிறோம். காங்கிரஸ், பா.ஜ. கட்சிகளுடன் உறவில்லை. அவற்றுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுடனும் கூட்டணி இல்லை.
தமிழகத்தில் 3வது அணியை ஏற்படுத்த மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் விரைவில் சந்திக்க உள்ளோம். விலைவாசி உயர்வு, மதவெறி, அணுசக்தி ஒப்பந்தம், அரசியல் சட்டத்தை வளைக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றை முன்நிறுத்தி 3 அணிக்கு இறுதிவடிம் கொடுக்கப்படும்.
அணிக்கு தலைமை யார் என்று இப்போதே சொல்ல முடியாது. தி.மு.க. என்ன செய்தாலும் குறை சொல்வதல்ல எங்கள் நோக்கம். ஜனநாயக ரீதியில் சில தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம். தி.மு.க அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறவில்லை. தற்போதைய நிலையில் முரண்பட்டு நிற்கிறோம் என்று வரதராஜன் கூறினார்.