சென்னையில் தனியார் வங்கி ஒன்றின் மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர் வங்கியில் இருந்து ரூ.1.50 லட்சம் பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வங்கியில் இருந்து அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த வங்கியில் குமாஸ்தாவாக பணிபுரிந்து வரும் ஆறுமுகம் என்பவரை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.
கடந்த 19ஆம் தேதி வங்கியில் வசூலான தொகை ரூ.1.14 கோடியை புதுச்சேரியில் இருந்து மதுராந்தகம் வழியாக சென்னையில் உள்ள வங்கியின் மண்டல அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது பணம் சரியாக இருக்கிறதா என்று பணியில் இருந்த வங்கி அதிகாரிகளால் எண்ணிப்பார்க்கப்பட்டது.
பின்னர், இந்த பணம் மீண்டும் கடந்த 20ஆம் தேதி எண்ணிப்பார்க்கப்பட்டது. அப்போது ரூ.1.50 லட்சம் பணம் குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அந்த வங்கியில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வரும் ஆறுமுகம் என்பவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து பணத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.