தமிழகத்தில் மாநிலம், மாவட்ட அளவிலான இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளுக்கு, நிர்வாகிகள் நியமனத்திற்கான நேர்காணல் நிகழ்ச்சி வரும் 28, 29ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மாநிலம், மாவட்ட அளவிலான இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனத்திற்கான நேர்காணல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 28, 29ஆம் தேதிகளில் சென்னை, சத்திய மூர்த்தி பவனில் நடைபெற உள்ளது.
வரும் 28ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலரும், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளருமான ஜிதேந்திர சிங், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக்தன்வர் ஆகியோர் தலைமையிலான மேலிடப் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது புகைப்படத்துடன் கூடிய விருப்ப மனுக்களை அகில இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் நேரில் அளிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.