''
திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலைய செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும்'' என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சாயப்பட்டறை கழிவுநீர் ஆற்றிலும், குடிநீரிலும் கலந்து விடுவதால், பொது மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துகிறார்கள்.
எனவே, திருப்பூரில் உள்ள 523 சாயத் தொழில் நிறுவனங்கள் சேர்ந்து 900 ஆயிரம் கோடி செலவில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து வருகின்றன. இந்த மொத்த செலவையும் சாயத்தொழில் நிறுவனங்களே செலவழித்துள்ளன.
இதில், மத்திய, மாநில அரசுகளின் மானியம், வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும் என்று சாயப்பட்டறை நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
வடநாட்டு மற்றும் அயல்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு எத்தனையோ சலுகைகளை அளித்து வருகிறது. அதுபோல, பொதுசுத்திகரிப்பு நிலையத்திற்கு ஆகியுள்ள மொத்தச் செலவை மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசே ஏற்க வேண்டும். ஆயிரக்கணக்கான சிறு சாயப்பட்டறைகளை இணைத்து ஆங்காங்கே சிறிய அளவிலான பொது சுத்திகரிப்பு நிலையங்களை தமிழக அரசே அமைத்திட வேண்டும்.
சாயத்தொழிலில் நமக்கு போட்டியாக இருக்கும் சீனா, வங்கதேச நாடுகளில் அந்நாட்டு அரசு அந்த நிறுவனங்களுக்கு பல சலுகைகள் வழங்கியுள்ளன. அதனால், அந்த நாடுகளோடு நாம் கடுமையாக போராட வேண்டியுள்ளது.
எனவே, இந்த பிரச்னையில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள், விவசாயிகள், பெரிய, சிறிய சாயப்பட்டறைகளின் நீண்டநாள் குறைகளை தீர்க்க சிறப்பு நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும்'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.