Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை தாக்குதல் நடத்தாது: நாராயணன்!

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை தாக்குதல் நடத்தாது: நாராயணன்!
, திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (21:56 IST)
இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையில் உள்ள சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தாலும், தமிழக மீனவர்கள் மீது தங்கள் நாட்டு கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தாது என்று சிறிலங்க அரசு உறுதியளித்துள்ளதாக தேச பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் கூறியுள்ளார்.

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.கே. நாராயணன், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்தாலும் அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துவோம் என்று சிறிலங்க அரசு இந்திய அரசிற்கு உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதலமைச்சர் கவலை தெரிவித்ததையடுத்து, தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர், சிறிலங்க அதிபர் மகிந்தா ராஜபக்சேயிடம் எடுத்துரைத்ததாகவும், அதனையடுத்து இந்த உறுதி மொழியை சிறிலங்க அரசு வழங்கியுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார்.

“இதற்குமேல் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலும் இருக்காது, கைது செய்யப்பட்டாலும் அவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவார்கள் என்பதே சிறிலங்க அரசு அளித்துள்ள உறுதி மொழியாகும” என்று நாராயணன் கூறினார்.

இரண்டு நாடுகளின் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதாக நாராயணன் தெரிவித்தார்.

கச்சத்தீவு: மீன் பிடி உரிமை நிலை நிறுத்தப்படும்!

தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாராயணன், கச்சத்தீவை சிறிலங்காவிற்கு அளித்தது ஒரு சர்வதேச அளவிலான உடன்படிக்கை. அதனை ஒரு இரவில் மாற்றிவிட முடியாது. ஆனால் 1974ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, அப்பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை ஏற்க சிறிலங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்றும், அது குறித்து இன்னும் சில வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் நாராயணன் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil