நாகர்கோவில் சிறப்பு துணை ஆட்சித் தலைவர் எஸ்.ஜனார்த்தனனை தாக்கிய சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் சுரேஷ் ராஜனை, பதவியில் இருந்த விலக்கக் கோரி நாகர்கோவிலில் இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையில், மாவட்ட செயலர் கே.டி. பச்சைமால் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டு அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் சுரேஷ் ராஜன் மீது முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தளவாய் சுந்தரம் வலியுறுத்தினார்.
முன்னதாக, அமைச்சர் சுரேஷ் ராஜனைக் கண்டித்து நடக்க இருந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி தர மறுத்த நிலையில், அ.இ.அ.தி.மு.க.வினர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையை அணுகி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.