தி.மு.க, காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்றும் இந்த அணியில் அ.இ.அ.தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுப்பிரமணிசாமி, இந்தியாவை அணுஆயுத நாடாக அமெரிக்கா அங்கீகரிக்காததால் இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்காக வலுவான கூட்டணி ஒன்றை அமைக்கும் ரகசிய முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இந்த அணியில் அ.இ.அ.தி.மு.க முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார் சுப்பிரமணியசாமி.
மேலும் அவர் கூறுகையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினியின் விடுதலை கோரும் மனு மீதான வழக்கு விசாரணை நடைபெறுகிறது. அன்று நான் நேரில் ஆஜராகி நளினி விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடுகிறேன் என்று தெரிவித்தார்.
இந்திய அரசியல் சட்டத்தின்படி காஷ்மீருக்கு விடுதலை அளிக்க முடியாது. வேண்டுமானால் காஷ்மீருக்கு விடுதலை கோருபவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க முடியும் என்று சுப்பிரமணியசாமி கூறினார்.