''
தி.மு.கழகத்தைப் பொறுத்தவரையில் எப்போதும் தோழமைக் கட்சியினரோடு தானாக முன் வந்து பகைத்துக் கொள்வதில்லை என்பதும், குறிப்பாக எங்களுடைய கொள்கைகளோடு ஒத்தக் கருத்துடைய பொதுவுடைமை கட்சியினரோடு உறவினை தானாக துண்டித்துக் கொள்ள முன் வந்ததில்லை'' என்றும் ஏ.பி.பரதனுக்கு முதலமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன், ''கூட்டணி குறித்த தமது நிலைபாட்டை தி.மு.க. முன்னதாகவே எடுத்து விட்டதாக தெரிகிறது. தற்போது தி.மு.க. தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளில் கம்யூனிஸ்ட் எதிர்ப்புத் தன்மை வெளிப்படுகிறது. இது வருத்தமளிக்கக் கூடியது. எனினும் தனிப்பட்ட முறையில் நான் என்றைக்கும் மரியாதை செலுத்தும் மூத்த தலைவர் கருணாநிதி'' என்று சொல்லியிருக்கிறாரே?
தோழர் பரதன் எப்படி என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரோ, அதைப் போலவே தான் நான் என்றைக்கும் மரியாதை செலுத்தும் பொது வுடைமைத் தலைவர்கள் தான் தோழர் பரதன் ஆனாலும், தோழர் ராஜா ஆனாலும், தோழர் பிரகாஷ் காரத் ஆனாலும், தோழர் எச்சூரி ஆனாலும் ஏன் இங்கே தமிழகத்திலே எடுத்துக் கொண்டால் கூட தோழர் நல்லகண்ணு, தோழர் தா.பாண்டியன், தோழர் என்.வரதராஜன், தோழர் டி.கே.ரெங்கராஜன் போன்றவர்கள். இதை அவர்களே அறிவார்கள்.
கூட்டணி குறித்த தனது நிலைபாட்டை தி.மு.க. முன்னதாகவே எடுத்து விட்டதாகத் தெரிகிறது என்றும், தி.மு.க. தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளில் "கம்யூனிஸ்ட் எதிர்ப்புத்தன்மை'' வெளிப்படுகிறது என்றும், பரதன் கூறியிருக்கிறார். இதற்கு மட்டும் நான் விளக்கமளிக்க விரும்புகிறேன்.
ஆற்காடு வீராசாமி கம்யூனிஸ்ட்கள் பற்றி சற்று கடுமையாக விமர்சனம் செய்து, அதற்கு கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் பதில் சொல்வதற்கு முன்னதாகவே, நான் எழுதிய அறிக்கையில், கழகப் பொருளாளர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது சற்று அளவுக்கு மீறியது மட்டுமல்ல, நாம் கடைப்பிடித்து வரும் அணுகு முறைக்கும் முரணானது'' என்று அவரைக் கண்டித்திருக்கிறேன். அது அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.
தேர்தல் உடன்பாடு, தோழமை கொள்வது என்பதெல்லாம் அந்தந்த கட்சிகளுக்கு உள்ள உரிமை. அவர்கள் கட்சியினரைக் கொண்டு கூட்டம் நடத்தி கலந்து பேசி எடுக்கப்பட வேண்டிய ஒன்று. அந்த அடிப்படையில் அதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு.
ஆனால் தி.மு.கழகத்தைப் பொறுத்தவரையில் எப்போதும் தோழமைக் கட்சியினரோடு தானாக முன் வந்து பகைத்துக் கொள்வதில்லை என்பதும், குறிப்பாக எங்களுடைய கொள்கைகளோடு ஒத்தக் கருத்துடைய பொதுவுடைமை கட்சியினரோடு உறவினை தானாக துண் டித்துக் கொள்ள முன் வந்ததில்லை என்பதையும் தோழர் பரதன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இது போன்ற பல உதாரணங்களை மார்க்சிஸ்ட் தலைவர்கள் பேசியதிலிருந்தும், மார்க்சிஸ்ட் தினசரி ஏடான "தீக்கதிர்'' ஏட்டிலிருந்தும் எடுத்துக்காட்ட முடியும். அவையனைத்தும், இந்தப் பிரச்சினைக்கு முன்பே வெளி வந்தவை என்பதற்கு தேதிவாரி ஆதாரங்கள் இருக்கின்றன. இது ஒரு விளக்கம் தானே தவிர; பதிலுக்குப் பதில் என்று எழுதி விவகாரத்தை வளர்க்க விரும்பவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.