இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி 45 பேரின் கண் பாதிப்புக்கு காரணமான மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் கடுவனூர் என்ற கிராமத்தில் கடந்த மாதம் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனையும், விழுப்புரம் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து நடத்தியது.
இந்த முகாமில் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். அப்போது கண் பார்வை அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 20 பேருக்கு கண்களில் கடுமையாக வலி ஏற்பட்டு பார்வை இழந்தனர். இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பெரம்பலூர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் திருச்சியில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கண் பார்வை பாதிக்கப்பட்டு ஜோசப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தும் போது மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தான் முகாம் நடத்த வேண்டும். இந்த முகாம் நடத்த கடந்த மாதம் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அனுமதி கிடைப்பதற்குள் முகாமை நடத்தி உள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையின்படி சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.