பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்வோம். அதுவரை ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி உள்பட தி.மு.க. தலைவர்களை பற்றி 'காடுவெட்டி' குரு அவமானகரமாக பேசியதாக எழுந்த சர்ச்சையையடுத்து தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. நீக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் கருணாநிதி, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி நீடித்திருந்தால் கூட்டணி பலம் வாய்ந்ததாக இருந்திருக்கும். இருப்பினும் பா.ம.க. வெளியேறியதால் தி.மு.க. கூட்டணியில் எந்தவித பாதிப்பும் இல்லை. பா.ம.க. வின் இந்த நிலைக்கு அவர்களேதான் காரணம் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே நேற்று முதலமைச்சர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பா.ம.க. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தான் உள்ளது. தமிழகத்தில் நாளைக்கேகூட தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு மீண்டும் திரும்பலாம் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ், "தமிழகத்தில் கடந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. அங்கம் வகித்த கூட்டணியே வெற்றிகரமான கூட்டணியாக இருந்து வந்துள்ளது. இதை கடந்த 1998, 1999, 2001, 2004, 2006ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் இதனை நிரூபித்து உள்ளோம்.
பாராளுமன்ற தேர்தல் வரும் வரை பா.ம.க. தொடர்ந்து ஆளுங்கட்சியின் தவறுகளை, குறைகளை சுட்டிக்காட்டி ஆக்கப்பூர்வமான, செயல்திறன் மிக்க எதிர்க்கட்சியாக செயல்படும். பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே தேர்தல் வியூகம் பற்றி முடிவு செய்வோம்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.