தமிழக ஆட்சியில் காங்கிரசுக்கு அமைச்சர் பதவி கேட்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியதற்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கட்சியின் வளர்ச்சிக்கு கருத்துக்கள் கூறுவதில் தவறில்லை என்று கூறினார்.
தமிழகத்தில் ஏற்கனவே இருந்த கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகியுள்ளதை குறித்து கேட்டதற்கு, அணு ஒப்பந்தம் வருங்கால வளர்ச்சிக்கு அவசியம். இதனை இடதுசாரி கட்சிகள் ஆதரிக்கவில்லை. அதனால் அவர்கள் மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என்று வாசன் பதில் அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் சோனியாவின் தலைமை, மன்மோகன்சிங் ஆட்சி சாதனை, மாநிலங்களில் உள்ள கூட்டணி கட்சி ஆட்சிகளின் சாதனை ஆகியவை வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று வாசன் கூறினார்.
தமிழகத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளை கலைத்து விட்டதாக தங்கபாலு கூறியுள்ளதை பற்றி கேட்டதற்கு, பத்திரிக்கைகள் மூலம் இது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை என்று வாசன் பதில் அளித்தார்.
தமிழக ஆட்சியில் காங்கிரசுக்கு அமைச்சர் பதவி கேட்க வேண்டும் என கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியதற்கு பதில் அளித்த அவர், கட்சியின் வருங்கால வளர்ச்சிக்கு கருத்துக்கள் கூறுவதில் தவறில்லை. முடிவு செய்ய வேண்டியது சோனியா காந்தி தான். அந்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு செயல்படுவர் என்று ஜி.கே.வாசன் கூறினார்.