பெரம்பலூரில் மருத்துவமனை ஒன்றில் கண் அறுவை சிகிச்சையின்போது தவறான மருத்து பயன்படுத்தப்பட்டதால், 45 பேரின் பார்வை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்ட தொண்டு நிறுவனம் ஒன்றும், பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனையும் இணைந்து, விழுப்புரம் மாவட்டம் கடுவனூரில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.
இந்த முகாமில் நடத்தப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில், 45 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 29-ஆம் தேதி பெரம்பலூரில் இவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது.
ஆனால், சிகிச்சைக்குப் பின்னரும் நோயாளிகளுக்கு பார்வை திரும்பவில்லை. கோவை மருத்துவமனை ஒன்றில் அவர்களுக்கு பரிசோதனை நடத்தியதில், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 45 பேருக்கு பார்வை பறிபோனது தெரிய வந்தது.
சம்மந்தப்பட்ட மருத்துவமனையை பாதிக்கப்பட்டவர்கள் அணுகியபோது, தங்களால் எதுவும் முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் செய்வதறியாது கதறியழுதனர். நிவாரணம் கேட்டு போராட்டத்திலும் குதித்தனர்.
இதற்கிடையே, கண் பார்வை பறிபோனதற்க்கு தவறான மருந்து அளிக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அனில் மேஷராம் உத்தரவிட்டுள்ளார்,