மதவாத, சமூக விரோத சக்திகளை முறியடிக்க கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இடதுசாரி கட்சிகள் தேசிய அளவில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அல்லாத 3-வது அணியை உருவாக்க முயற்சிக்கின்றனர். தேசிய அளவில் எடுத்த அதே நிலையை தமிழகத்திலும் பின்பற்ற முயற்சிக்கின்றனர்.
ஆனால், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இன்று உள்ளதுபோல் கம்யூனிஸ்டு கட்சிகள் தொடர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மதவாத, சமூக விரோத சக்திகளை முறியடிக்க முடியும்.
இந்திய அளவில் எவ்வித நிலைப்பாடு எடுத்திருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று கூறினார்.