''
தி.மு.க.வை நம்பி காங்கிரஸ் இருந்த நிலை மாறி தற்போது காங்கிரசை நம்பி தி.மு.க இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது'' என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் கூறினார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது இடதுசாரிகளுக்கும், தி.மு.க.வும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அத்வானியை பிரதமராக ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி வைத்துக் கொள்வோம். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து பேச முடியும் என்றார்.
நம்மால் இனி ஆட்சிக்கு வரமுடியாது என்று நினைத்து தி.மு.க.வினர் செயல்படுகின்றனர். ஒரு காலத்தில் தி.மு.க.வை நம்பி காங்கிரஸ் இருந்த நிலை மாறி தற்போது காங்கிரசை நம்பி தி.மு.க. உள்ளது என்று இல.கணேசன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், விலைவாசி உயர்வு குறித்து மத்திய- மாநில அரசுகள் கவலைப்படுவதாக இல்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது இந்தியாவில் விலையை குறைக்க மத்திய அரசு முன்வரவில்லை என்றார்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு வரும் பொங்கல் தினத்தன்று இலவச வேட்டி சேலைகளை விநியோகம் செய்வதை வரவேற்கிறோம் என்று கூறிய இல.கணேசன், ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்களைக் கொண்டு வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தெரிவித்தார்.