சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குப் பிறகு, விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் பற்றி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி, பட்டினப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடையின் பின்புறம், அங்குள்ள யுனிவர்சல் கார்போரண்டம் பின்புறம் மற்றும் நீலாங்கரை பல்கலைநகரில் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், சென்னை புறநகரில் விநாயகர் சிலைகளை எண்ணூர் ராமகிருஷ்ணாநகரில் கரைக்க அனுமதிக்கலாம் என்று புறநகர் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இவர்களின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்தந்த இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.