கம்யூனிஸ்ட்டுகள் ஏற்கனவே கூட்டணியில் இருந்து விலக திட்டமிட்டடுள்ளதால்தான் தி.மு.க.வுக்கு எதிராக பிரசாரத்தை தொடங்கிவிட்டார்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி குற்றம் சாற்றியுள்ளார்.
கர்நாடகம், இமாசலப்பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியை சுட்டிகாட்டி, காங்கிரஸ் என்கிற மூழ்கும் கப்பலில் தி.மு.க. பயணம் செய்ய விரும்பினால், அது அவர்களின் முடிவு என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என். வரதராசன் கூறியிருந்தார். இதற்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமைச்சரும், கழகப் பொருளாளருமான ஆற்காடு வீராசாமியின் கம்யூனிஸ்டு பற்றிய பேச்சுக்கு நான் மறுப்பு தெரிவித்து விளக்க அறிக்கை வெளியிட்ட பிறகும்; "காங்கிரஸ் கப்பலுடன் சேர்ந்து தி.மு.க. மூழ்கி விடப்போகிறது'' என்று தோழர் வரதராசனைப் போன்றவர்கள் "ஆரூடம்'' கணிப்பதைப் பார்க்கும்போது, அவர்கள் தி.மு.க. தோழமை அணியில் இருப்பதில்லையென்று ஏற்கனவே திட்டமிட்டுவிட்டார்கள் என்பதும், அதனால்தான் ஒரு மாத காலத்துக்கு முன்பே அவர்கள் ஏடுகளிலும், மேடைகளிலும் தி.மு.க. எதிர்ப்புப் பிரச்சாரத்தை மெல்ல மெல்லத் தொடங்கி விட்டார்கள் என்பதும் தெளிவாகிறது.
காங்கிரஸ் கப்பலில் ஏறி தி.மு.க. மூழ்கிவிடும் என்ற வரதராசனின் ஆரூடத்தை "அருளாசி''யாகவே கருதிக் கொள்கிறேன். எப்படியோ சுருண்டு கிடந்த "சூழ்ச்சித் திரை'' விரிந்து விட்டதைக்கண்ட பிறகாவது "விழிப்போடிருப்போம்'' என்று கூறியுள்ளார்.