சங்கரராமன் படுகொலை வழக்கில் புதுச்சேரி அரசு, அரசு வழக்கறிஞரை நியமிக்க காலதாமதம் ஏற்படுவதால் விசாரணையை செப்டம்பர் மாதம் 24ஆம் தேதிக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி வி. ஆறுமுகம் தள்ளிவைத்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி உள்பட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றம் சாற்றப்பட்ட 24 பேரில் காஞ்சி சங்கராச்சாரியார், விஜயேந்திர சரஸ்வதி உள்பட 16 பேர் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து சங்கராச்சாரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளதால், தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது என்றும், புதுச்சேரி அரசுதான் வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அரசு வழக்கறிஞரை நியமிக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நீதிமன்றத்திற்கு அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சண்முகம் தெரிவித்தார்.
சங்கரராமன் படுகொலை வழக்கில் புதுச்சேரி அரசு, அரசு வழக்கறிஞரை நியமிக்க உள்ளதால், அடுத்த மாதம் 24ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.