விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காது கேளாத, வாய்பேச முடியாத இரண்டு பெண்களுக்கு ஊனமுற்றோருக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.400- ஐ உடனடியாக வழங்க முதலமைச்சர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சாத்தனந்தல் கிராமத்தைச் சேர்ந்த குப்பம்மாள், ஜெயராணி மற்றும் குழந்தைகள் அர்ச்சனா, அபிநயா, பிரியா ஆகியோர் காது கேளாதவர்கள் என்றும், வாய் பேச முடியாதவர்கள் என்றும், அவர்கள் குடும்பம் அரசு உதவிக்காகப் பல ஆண்டுகளாக காத்திருப்பதாகவும், ஆனால் செஞ்சியை அடுத்த பென்னகரில் பார்வையிழந்த சந்திரன் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு அரசு உதவி கிடைத்துள்ளது என்றும் இன்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
இந்தச் செய்தியைப் படித்த முதலமைச்சர் கருணாநிதி விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு, சாத்தனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரில், ஊனமுற்றோருக்கான மாதாந்திர உதவித் தொகை அளிக்கும் திட்டத்தின்கீழ் பெரியவர்களுக்கு மாதம் ரூ.400 உதவி அளித்திடுவதற்கான ஆணையினை இன்றைய தினமே பிறப்பிக்க வேண்டுமென்றும், இந்த மாதம் முதற்கொண்டே இந்த உதவித்தொகை அவர்கள் குடும்பத்திற்கு கிடைத்திட வேண்டுமென்றும், பள்ளியில் படிக்கும் மூன்று குழந்தைகளுக்கும் தேவையான உதவிகளை செய்திட வேண்டுமென்றும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.