தமிழகத்தில் தற்போது மின் தடை காரணமாக தொழிற் சாலைகளில் அதிக அளவு டீசல் பயன்படுத்தபடுவதால், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தலைமை செயலர் திரிபாதி கூறியுள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக கடும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டீசல் தட்டுப்பாடு குறித்து தலைமை செயலகத்தில் 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் திரிபாதி, சிறப்பு தலைமை செயலாளர் ஸ்ரீபதி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலர் திரிபாதி, "அகில இந்திய வேலை நிறுத்தம் காரணமாக எண்ணெய் லாரிகள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், ஒரு சில இடங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகியுள்ளதால் டீசல் தேவை 35 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் 15 விழுக்காடு அளவுதான் சப்ளையை உயர்த்தி உள்ளன.
தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்குவதாலும், மின்தடை காரணமாகவும் ஜெனரேட்டர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கூடுதல் டீசல் தேவைப்படுகிறது.
தற்போது நிலவி வரும் இந்த டீசல் பற்றாக்குறை இன்னும் 2, 3 நாட்களில் சரியாகி விடும். அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.