தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து ஒசூரில் இன்று துவங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் விலக்கிக் கொண்டன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அதே கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து நீடிக்கின்றன.
இதுகுறித்து கடந்த வாரம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், ஒசூரில் ஆக. 22ல் தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா? இல்லையா? என்பது முடிவு செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
நாளை மறுநாள் (24-ம் தேதி) பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடக்கிறது. தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார். அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர்கள் டி.ராஜா, குருதாஸ் தாஸ் குப்தா, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் பங்கேற்கின்றனர்.