சென்னை தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையிலும் அதன் புறநகரங்களிலும் திடீரென்று பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இது போன்ற தட்டுப்பாட்டால் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலைமைக்கு வந்தது.
அந்த நேரத்தில் கச்சா எண்ணை விலை உயர்வாலும், நமக்கு வரவேண்டிய டாங்கர்கள் வர தாமதமானதாலும் அந்த நிலைமை உருவாகியதாக அரசால் விளக்கம் சொல்லப்பட்டது. ஆனால் அந்த நிலைமை சரியான பின்பு திடீரென ஒரு மாதத்திற்குள் மறுபடியும் சென்னையிலும், புறநகரங்களிலும் கடுமையான டீசல் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்களுக்கு எண்ணை நிறுவனங்கள் தாமதப்படுத்தி அனுப்புவதாக கூறுகிறார்கள். முதன்முறை டீசல் தட்டுப்பாடு ஏற்படும்போதே, வேண்டுமென்றே இதுபோன்ற தட்டுப்பாட்டை உருவாக்கி விற்பனையை குறைக்கிறார்களோ என்ற சந்தேகத்தை உருவாக்கியது.
ஒரு புறம் மக்களைப் பாதிக்கின்ற வண்ணம் டீசல், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை அரசே மானியமாக பெட்ரோலிய கம்பெனிகளுக்கு வழங்குகிறது என்னும் தோற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்தி விட்டு மறுபுறம் உள்ள அவர்களுக்கு, பெட்ரோலிய கம்பெனிகளே டீசல் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி நஷ்டத்தை தவிர்க்கிறார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
மின்சாரத்தட்டுப்பாடு இருக்கும் போது டீசல் ஜெனரேட்டர்களைத்தான் பெரும்பாலான சிறு, குறு தொழிற்சாலைகளும், விவசாய பெருமக்களும் நம்பி இருக்கிறார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க ஆவன செய்ய வேண்டும்" என்று சரத்குமார் கூறியுள்ளார்.