அணுசக்தி ஒப்பந்தம் பற்றி பொது மேடையில் விவாதிக்க தயாராக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பொறுப்புள்ள கட்சிகள், பொறுப்புள்ள தலைவர்கள் பொதுமேடையில் விவாதிக்க முன்வந்தால் ஆதாரங்களுடன் விளக்க தயாராக உள்ளேன் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை நாங்கள் ஏற்கனவே விளக்கி விட்டோம். அதனால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்தோம்.
சீனாவின் தூண்டுதலின் பேரிலேயே அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்று கூறுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கூடாது என்று சீனா எப்போது வலியுறுத்தியது என்பதை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொல்ல வேண்டும்.
அணுசக்தி முகமையில் சீனா உறப்பினராக இருக்கிறது ஆதரிக்கிறது. ஆனால் நாங்கள் அணுசக்தி ஒப்பந்தத்தை முற்றிலும் எதிர்க்கிறோம். எனவே அவர் உண்மையில் கேட்க வேண்டியதிருந்தால், சீனாவும், இங்குள்ளவர்களும் மாறுபட்ட நிலையை எடுத்திருக்கிறார்களே என்றுதான் கேட்க வேண்டும்.
கூடங்குளத்தில் ரஷியாவின் அணு உலைக்கு ஒப்பந்தம் போட்டது அப்போதிருந்த அரசு. அந்த ஒப்பந்தம் போடுவதற்கு முன் இவ்வளவு விவாதம் எழவில்லை. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் உள் அடங்கியுள்ள ராணுவ ஒப்பந்தத்தைதான் எதிர்க்கிறோம் என்பதை புரிந்து பேசுவது நல்லது.
வரும் நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் காணாமல் போவார்கள் என்று கூறி அமைச்சர் ஆற்காடு வீராசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்துள்ளார். ஓசூரில் எங்களுடைய மாநில தலைமைக்குழு கூட்டம் இன்று முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்தக்கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலைமை குறித்தும் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பேச்சு குறித்தும் விவாதிப்போம் என்று கூறினார்.