தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கும், 6-வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள், இதர படிகளை நடைமுறைப்படுத்துவதற்காக பரிந்துரைகளை வழங்க 'அலுவலர் குழு' ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்" மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள், இதர படிகள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் அவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க 'அலுவலர் குழு' ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வலுவலர் குழு முதன்மை செயலர் ( உள்துறை) தலைமையில் நிதித்துறை, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றின் முதன்மை செயலர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இருக்கும்.
இந்த 'அலுவலர் குழு' மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள், இதரப் படிகள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து அவற்றை தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் மேற்கொள்ளதக்கவகையில் பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த அலுவலர் குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், திருத்திய ஓய்வுக்கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அலுவலர், ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகித திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கலாம். இக்குழு தனது அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் அரசிற்கு அளிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.