பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய அளவில் இன்று நடந்த வேலை நிறுத்தத்தன் போது தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், 6-வது ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள பாதகமான அம்சங்களை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தமிழக அரசு தார்மீக ஆதரவு கொடுத்த போதிலும், பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படும் என்று அறிவித்தது. இதனால் தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் அனைத்தும் வழக்கம் போல ஓடின. ரயில் போக்குவரத்தும் திட்டமிட்டபடி நடந்தது.
சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகளும், ஆட்டோக்களும் எந்தவித இடையூறும் இல்லாமல் வழக்கம் போல் ஓடின. அனைத்து கடைகளும் வழக்கம் போல் திறந்தே இருந்தன.
சென்னையில் ஒருசில முக்கிய இடங்களில் தொழிற்சங்கத்தினர் இன்று மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
விமானநிலைய ஊழியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னையில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வங்கி, தபால் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் தொலை தொடர்பு, பண பரிவர்த்தனைகளில் பாதிப்பு ஏற்பட்டது. மற்றபடி பள்ளி, கல்லூரிகள் அரசு, தனியார் அலுவலகங்கள் இயக்கத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.