நாடு தழுவிய அளவில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நடந்து வரும் பொது வேலை நிறுத்தத்தின் போது, ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர். திருவாருர் மாவட்டத்தில் 5 இடங்களில் அவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பிருந்தாவன் விரைவு ரயிலை முற்றுகையிட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் தலைமையில் 5 இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்ட அக்கட்சி தொண்டர்கள் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் பிருந்தாவன் விரைவு ரயிலை முற்றுகையிட்ட ஏ.ஐ.சி.டி.யு. தொண்டர்கள் 65 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆட்டோவை அடித்து நொறுக்கிய வேலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில், அரசு போக்குவரத்துக்கழக பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுபோல் தர்மபுரி மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் தொண்டர்கள் உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினரும் கைது செய்யப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.