நாடு முழுவதும் இன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்தினால் இடதுசாரிகள் ஆளும் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமான சேவை முடங்கியுள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள பாதக அம்சங்களை நீக்குதல், புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைத் தொடருதல், தொழிலாளர் நலச்சட்டங்களை கடுமையாக அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி ஆதரவு தொழிற்சங்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இடது சாரிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களான மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநிலங்களுக்கிடையேயான விமான சேவை முடங்கியுள்ளது.
டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல் டெல்லியில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.டெல்லியில் இருந்து போர்ட்பிளேயர், மும்பை செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். இதனால் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இடதுசாரி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோக்கள் ஓடவில்லை.
இந்த பொது வேலை நிறுத்தத்தால் திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.