ஒகேனக்கல் பகுதி தமிழகத்துக்குதான் சொந்தமானது. இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி கூறியுள்ளார்.
ஜப்பானிய அரசாங்கத்தின் ஊரக வளர்ச்சி நிதியத்தின் சார்பில் சென்னையில் உள்ள ஜப்பானிய துணை தூதரகத்தில் புகைப்படக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை தமிழக அரசின் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி தொடங்கிவைத்தார்.
பின்னர் பேசிய அவர், ஒரு சில அரசியல் கட்சிகள் தங்களது சுயநலத்துக்காக ரூ.1,334 கோடி ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் குழப்பம் விளைவித்து வருகிறது.
தற்போது ஒகேனக்கல் திட்ட விவகாரத்தில் பிரச்சனைகள் நிலவுவதால், அதுபற்றிய விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். ஒகேனக்கல் பகுதி தமிழகத்துக்குதான் சொந்தமானது. இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
ஒகேனக்கல் கர்நாடகாவுக்கு சொந்தம் என்று அம்மாநில அரசு இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒகேனக்கல் பகுதியானது தமிழகத்துக்கே சொந்தம் என்பதை நிரூபிக்க எங்களிடம் தகுதியான ஆவணங்கள் உள்ளன.
இந்த கூட்டுக்குடிநீர் திட்டம் என்பது இப்போது முடிவெடுத்து இப்போதே செயல்படுத்த ஆரம்பிக்கவில்லை. காவிரியில் இருந்து தமிழகத்துக்குச் சொந்தமான 1.4 டி.எம்.சி. தண்ணீர் பெறுவதற்காக, இரண்டு மாவட்டங்களில் வாழும் 30 லட்சம் மக்களின் தாகத்தை தீர்க்கவே கொண்டுவரப்பட்டது.
ஒரு சில அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் தங்களின் சுயநலத்துக்காக இந்த பிரச்சினையை பெரிதாக்கி விட்டன. தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அட்டவணைப்படி நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது என்று தலைமை செயலார் எல்.கே. திரிபாதி கூறினார்.