தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை நடத்த உள்ள பொது வேலை நிறுத்தத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பங்கேற்காது என்று அதன் தலைவர் செ. குப்புசாமி எம்.பி. கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து ஆகஸ்டு 20ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்வதற்கான கோரிக்கைகளுக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க (தொ.மு.ச.) பேரவையின் முழு ஆதரவு உண்டு.
தமிழகத்தை போல அகில இந்திய அளவில் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வருதல், தமிழக அரசு பணி நியமன தடையை நீக்கியதை போல அகில இந்திய அளவிலும் தடையை நீக்கி காலியிடங்களை பூர்த்தி செய்யவும், பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விற்பனை செய்வதை தடை செய்தல், வைப்பு நிதி தொகைகளை பங்கு சந்தையில் முதலீடு செய்வதை தடுப்பது போன்ற இதர கோரிக்கைகளுக்கு தொ.மு.ச. பேரவை முழு ஆதரவு அளிக்கிறது. ஆனால் பேரவை இணைப்பு சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இயலாது" என்று கூறியுள்ளார்.