அரசு பேருந்துகள் நாளை வழக்கம் போல் ஓடும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள பாதக அம்சங்களை போக்குதல், புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைத் தொடருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி ஆதரவு தொழிற்சங்கள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
மத்திய அரசுக்கு எதிராக நாளை நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தின் போது பேருந்து, லாரிகள் ஓடாது என்று சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் நாளை அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " நாளைய தினம் தொழிலாளர்கள் அகில இந்திய அளவில் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு தார்மீக ஆதரவு உண்டு. ஆனால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை. எனவே, அரசு பேருந்துகள் நாளைய தினம் ஓடும்" என்று அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.