ரெட்டணை கிராமத்தில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணையை உட்கோட்ட நீதிபதிக்கு பதிலாக உயர் நீதிமன்ற நீதிபதி அளவிலானதாக மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கிராமத்தில் 10 பேர் கொண்ட குழுவிற்கு 17 பேர் செய்யக்கூடிய வாய்க்கால் வேலையை நிர்ணயித்ததோடு, ரூ.80 என்ற கூலியை ரூ.40 ஆகக் குறைத்து வழங்குவோம் என்று தலத்தில் அதிகாரிகள் நிலை எடுத்ததுதான் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்களை அதிகாரிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவு வேலையை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதோடு, அதிரடிப்படையை வரவழைத்து கண்மூடித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கலைச் செல்வன் உள்ளிட்ட பலரை காவல் துறையினர் கடுமையாகத் தாக்கி ரத்தகாயத்திற்கு இலக்காக்கியுள்ளனர். துப்பாக்கிசூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
இப்பின்னணியில், ரெட்டணை கிராமத் துப்பாக்கி சூடு தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனினும், இந்த விசாரணையை உட்கோட்ட நீதிபதிக்கு பதிலாக உயர் நீதிமன்ற நீதிபதி அளவிலானதாக மாற்ற வேண்டும் என்று கோருகிறோம்.
ரெட்டணை கிராமத்தில் இருந்து காவல் துறையினரை விலக்கிக் கொள்ளவும், இந்த சம்பவம் தொடர்பாக போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவும், காயமடைந்த அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிடவும் கேட்டுக்கொள்கிறோம்.
ரூ.80 கூலி மாநிலம் முழுவதிலும் முறையாக வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்தவும், இதற்கு மாறாக செயல்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை வலியுறுத்துகிறோம்" என்று என்.வரதராஜன் கூறியுள்ளார்.