திருச்சி: தமிழக அரசுக்கு எதிராக இடதுசாரிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் பாமக அதனை ஆதரிக்கும் என்று, அதன் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் எண்ணம் எதுவும் தனது கட்சிக்கு இல்லை என்றார்.
இதேபோன்றதொரு தீர்மானத்தை அதிமுக கொண்டு வந்தால், அதனை பாமக ஆதரிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதைப் பொருத்தும், அப்போதைய அரசியல் சூழ்நிலைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையிலும் முடிவு எடுக்கப்படும் என்றார்.
வெளிநாட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய ராமதாஸ், எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன, வேலை வாய்ப்பு பெற்றவர்கள் எவ்வளவு, இன்னும் எத்தனை பேருக்கு வேலை கிடைக்க வேண்டும், எவ்வளவு தொகைக்கு முதலீடு ஈர்க்கப்பட்டது போன்ற விவரங்களை அரசு அதில் தெளிவு படுத்த வேண்டும் என்றார்.
இவ்விவகாரத்தில் அரசு வெளியிடும் அறிவிப்புகளும், அதன் முடிவுக்களும் பொருந்துவதாக இல்லை என்பதால் தான், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தனது கட்சி கோருவதாக, அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமைய வேண்டும் என்ற தனது யோசனை குறித்து அக்கட்சி தான் முடிவு செய்ய வேண்டும் என்று, ராமதாஸ் மேலும் கூறினார்.