திண்டிவனம் அருகே விவசாயத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி, துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், குறைவாக கூலி வழங்கியதைக் கண்டித்து, திண்டிவனம் அருகில் ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும் துப்பாக்கியால் சுட்டும் விரட்டி அடித்தனர். இதில் பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். ரெட்டணை கிராமத்தில் அதிக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாலும் அந்த ஊரைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாலும் அங்கு பதற்றம் நிலவுகிறது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்படி, தங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான கூலிக்காக போராடிய ஏழை விவசாய தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது.
இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சுமுகமாகத் தீர்ப்பதை விடுத்து போலீஸ் துறையைக் கொண்டு தீர்வுகாண முயற்சிப்பது எதிரான விளைவுகளை ஏற்படுத்தும்.
தடியடி, துப்பாக்கிச் சூடு குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும். ஒட்டுமொத்தமாக கிராம மக்கள் மீது வழக்குப் பதிவுசெய்து அவர்களை மேலும் சிரமத்துக்கு ஆளாக்குவதைத் தவிர்க்கவேண்டும் என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.