கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறிலங்க கடற்படை சரமாரியாக தாக்கி வலைகளை அறுத்து சேதப்படுத்தியது.
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் கொழும்புவில் நடந்த சார்க் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்றார்.
அப்போது சிறிலங்க அதிபர் ராஜபக்சேயிடம் தமிழக மீனவர்கள் தாக்குதல் பிரச்னை குறித்து பேசினார். இதையடுத்து சிறிலங்க அரசு வானொலி மூலம் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதனால் தமிழக மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட படகுகள் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றன. கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 4 படகுகளை சிறிலங்க கடற்படையினர் சுற்றி வளைத்து வலைகளை அறுத்து நாசப்படுத்தினர்.
படகுகளுக்குள் இருந்த 16 மீனவர்களை சரமாரியாக தாக்கி, இப்பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என அடித்து துரத்தினர். இதைப் பார்த்த மற்ற மீனவர்களும் உயிருக்குப் பயந்து தப்பியோடி வந்தனர்.
ராமேஸ்வரம் மீன்துறையினர் மற்றும் காவல்துறையினர் தாக்குதலுக்கு ஆளான மீனவர்களை தனியே அழைத்து சென்றனர்.
சிறிலங்க கடற்படை தாக்குதல் சம்பவம் குறித்து வெளியே சொன்னால் எல்லை மீறியதாக வழக்குப்பதிவு செய்வோம் என மிரட்டி இச்சம்பவத்தை மறைக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க மாவட்ட மாணவரணி துணை செயலாளர் அயோத்திராஜ் கூறுகையில், ''மீனவர்கள் தாக்குதல் சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என தமிழக அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். சிறிலங்க அரசை கண்டிப்பதை விடுத்து, சம்பவத்தை மறைக்கும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியது'' என்றார்.