சென்னை மாநகரில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையிலும், மக்களின் பிரச்சினைகளை வீடு தேடிச்சென்று தீர்த்து நோக்கத்துடனும் நடமாடும் காவல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2003-ஆம் ஆண்டு சென்னை நகரில் நடமாடும் காவல் நிலையத் திட்டம் தொடங்கப்பட்டது. எனினும் இது சரிவர செயல்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது, ஆணையர் சேகரின் முயற்சியால் இத்திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள நடமாடும் காவல் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 காவலர்கள் பணியில் இருப்பார்கள். முதியோர், பெண்கள், காவல் நிலையத்திற்கு நேரில் வர இயலாதவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தால், நடமாடும் காவல் நிலையம் வீடு தேடி வந்து புகார் மனுக்களைப் பெற்றுக் கொள்ளும்.
சென்னையில் சனிக்கிழமை அன்று நடந்த நிகழ்ச்சியில், காவல்துறை ஆணையர் சேகர் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், நகரில் இதேபோல் மேலும் 9 நடமாடும் காவல் நிலையங்கள் செயல்பாட்டில் இருக்கும் என்றும், இவை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.