''சுயநிதி பொறியியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு மாநில அரசின் தடையின்மை சான்று தேவையில்லை என்று 2006லேயே சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பொறியியல் கல்விக்கான மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரையில் 14.8.2008 மாலையுடன் முடிவடைந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இதுவரை 5880 தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும், 120 பழங்குடியின மாணவர்களுக்கும் அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 14ஆம் தேதி அன்று காலியாக உள்ள தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான அரசு ஒதுக்கீட்டுப் பொறியியல் கல்லூரி இடங்கள் 8,868 மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பம் செய்துள்ள மீதமுள்ள 8,189 தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆகையினால் விண்ணப்பம் செய்துள்ள அத்தனை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் முழுமையாக இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதேபோல், கடந்த 14 ஆம் தேதி அன்று காலியாக உள்ள 674 பழங்குடியின மாணவர்களுக்கான இடங்களுக்கு 202 பழங்குடியின விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் முழுமையாக இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 2005-06 ல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் 4813 பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
கடந்தாண்டு அதாவது, 2007-08 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது மிகப் பெரிய வளர்ச்சி என்பதை யாராலும் மறுக்க முடியாது. 2005-06ம் ஆண்டில் 236 சுயநிதி பொறியியல் இருந்தன. 2008-09 ல் 344 சுயநிதி பொறியியல் கல்லூரிகளாக அதிகரித்துள்ளன.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு மாநில அரசின் தடையின்மை சான்று தேவையில்லை என்று 2006லேயே சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே சமயத்தில் அதிக எண்ணிக்கையில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் வந்துள்ளதால் தான் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் 2005-06 வரை அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகக கல்லூரிகள் 14 ஆக இருந்தன. இன்றைக்கு அது 20 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலமாக அதிக அளவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவு மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது'' என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.