மத்திய அரசை எதிர்த்து ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் அன்றைய தினம் தமிழகத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தை மேற் கொள்ள தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு முடிவு செய்து, அதற்கான குழுத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, பொது வினியோக முறையை பலப்படுத்த தவறியதன் காரணமாக என்றும் இல்லாத அளவிற்கு அத்தியாவசிய பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்து ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய அரசை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அனைத்து விவசாயத் தொழிலாளர்களும் ஒன்று பட்டு, விவசாயப் பணிகளை முற்றிலுமாக புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பார்கள். அன்றைய தினம் மாநிலம் முழுவதும் சாலை, ரயில் போராட்டத்திலும் பல்லாயிரக்கணக்கில் ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளார்.