''தீவிரவாதிகளை அழிக்கும் ஆட்சி மலர வேண்டும்'' என்று பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னை, மயிலாப்பூரில் இன்று தீவிரவாதத்தை கண்டித்து பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், தீவிரவாதிகளுக்கு மதம், ஜாதி எதுவும் இல்லை. தீவிரவாதிகளை மத அடிப்படையில் பார்க்கக்கூடாது அவர்கள் தேசத்துக்கு எதிரானவர்கள் என்றார்.
போலி மதச்சார்பின்மை மூலம் மக்களை பிரிக்கவேண்டாம் என்று கூறிய அவர், குறிப்பிட்ட மதத்தை நினைத்து தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டுவதாகவும் குற்றம் சாற்றினார்.
தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதத்துக்கும் எதிராக குரல் கொடுத்து வரும் அத்வானி தலைமையில் ஆட்சி மலர்ந்தால் தீவிரவாதிகள் ஒடுக்கப்படுவார்கள் என்று இல.கணேசன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தேசிய சிந்தனைக்கும், மத சிந்தனைக்கும் வித்தியாசம் தெரியாது அதனால்தான் பா.ஜ.க. மதவாதத்தை தூண்டுவதாக கூறி வருகிறார்கள். இந்துக்கள் பாதிக்கப்படும் போதும், அமர்நாத் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்த போதும் குரல் கொடுக்க எந்த கட்சியும் முன்வரவில்லை என்று இல.கணேசன் குற்றம்சாற்றினார்.