தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 98.6 விழுக்காடு முடிந்துவிட்டது என்றும் இதை 100 விழுக்காடாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான நவீன் சாவ்லா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளகர்களிடம் பேசிய அவர், "இந்தியா முழுவதும் நடந்து வரும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளில் உள்ள குறைகளை உடனுக்குடன் போக்க பொதுமக்கள் உரிய விண்ணப்பத்துடன் பூர்த்தி செய்து சரி செய்து கொள்ளவேண்டும்.
வாக்குப்பதிவின் போது தேர்தல் ஆணையம் எடுக்கும் வீடியோ படம் தேவைப்பட்டால் அரசியல் கட்சிகள் உரிய முறையில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
தொகுதிகள் மறு சீரமைப்பு குழு இந்தியா முழுவதும் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு அதனடிப்படையில் மத்திய அரசிடம் வழங்கிய புதிய தொகுதிகள் பட்டியலை ஏற்று மத்திய அரசு அறிவித்துள்ள இறுதி முடிவை ஏற்றுக் கொள்ளவேண்டும்" என்று நவீன் சாவ்லா கூறினார்.