Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மக்கள் வளமாக வாழ்வர்: முதல்வர்!

தமிழக மக்கள் வளமாக வாழ்வர்: முதல்வர்!
, வெள்ளி, 15 ஆகஸ்ட் 2008 (18:49 IST)
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி என் உயிருக்கு இணையான தமிழ் சமுதாயத்தை உயர்த்தி நிறுத்தும் பணிகளை நிறைவேற்றுவதில் நொடிப் பொழுதையும் வீணாக்காமல் தாம் உழைப்பதால், தமிழக மக்கள் வளமான வாழ்க்கையைப் பெறுவார்கள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 62வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை கோட்டையில் நடந்த கொடியேற்றும் விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதல்வர் கருணாநிதி இன்று பேசியதாவது:

சுதந்திரத் திருநாளில் தேசியக் கொடி ஏற்றும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முதல் குரல் கொடுத்து, அந்த உரிமையை பெற்ற தந்தவன் என்ற பெருமித உணர்வோடு, 12-வது முறையாக இன்று சுதந்திர தின நாளில் தேசியக் கொடியை கோட்டையில் ஏற்றி வைத்து மகிழ்கிறேன்.

இதே கோட்டை கொத்தளத்து கொடி மரம் ஏறி ஆங்கிலேயர் கொடியை இறக்கி நமது நாட்டு தேசிய கொடியை பறக்க விட முயன்று கைதாகிய வீரத்திருமகன் ஆர்யா (எ) பாஷ்யத்தை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்.

சமூக நீதியுடன் இணைந்து தொடரும் வளர்ச்சியை உறுதி செய்தல், மக்களின் வாழ்வதாரங்களை பாதுகாத்தல், கிராமப்புற-நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக தமிழக அரசு கொண்டுள்ளது. இந்த குறிக்கோளையொட்டியே கடந்த 2 ஆண்டுகளாக திமுக அரசு ஆக்கப்பூர்வமான பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி 60 லட்சம் டன்னில் இருந்து 100 லட்சம் டன் ஆக உயர்ந்துள்ளது. 1.61 லட்சம் ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பின் ரூ.25,683 கோடி முதலீட்டில் 19 புதிய தொழிற்சாலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 74 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக ஏறத்தாழ மூன்று லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முழுவதும் பயன்பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.1,334 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படுகிறது. சென்னை குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க மீஞ்சூரிலும் நெம்மேலியிலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு பணிகளும் நடந்து வருகின்றன. சென்னை மாநகரில் பல ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இத்தகைய பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக என் உயிரனைய தமிழ் சமுதாயத்தை உயர்த்தி நிறுத்தியும் பணிகளை நிறைவேற்றுவதில் நொடிப் பொழுதையும் வீணாக்காமல் உழைத்து வருகிறேன். எனவே தமிழக மக்கள் வளமாக வாழ்வார்கள்; வெற்றிகளை குவிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தமிழக மக்களுக்கு என் இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் கருணாநிதி பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil