செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ஓராண்டு முழுவதும் பேரறிஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 100வது பிறந்த நாள் விழாவை தமிழ் நாட்டிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா,
புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் உள்ள அனைத்து பகுதிகளிலும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடர்ந்து நூறாவது ஆண்டு முழுவதும் பொதுக் கூட்டங்கள், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டி மன்றம், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதை போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற நிகழ்ச்சிகளை அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும்.
அதே போல், பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகரங்கள், பேரூராட்சிகள் மற்றும் ஒவ்வொரு கிராமங்களிலும் மக்களுக்குப் பயன்படும் வகையில் நூலகங்களை அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் அமைத்திட வேண்டும்.
தமிழ்நாடு உட்பட கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் அ.இ.அ.தி.மு.க கொடியினை ஏற்றிவைத்து பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அல்லது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுகொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.