வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 20ஆம் தேதி கடைசி நாள். மேலும், கால நீட்டிப்பு செய்யப்படாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தொகுதி சீரமைப்புக்குப் பின், புதிய தொகுதிகள் அடிப்படையில் வாக்காளர் பட்டியல்களை திருத்தும் பணி நடக்கிறது. இது பற்றி அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் விவாதிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கு வரும் 20ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதை நீடிக்க வேண்டும் என்று கோரினர்.
ஏற்கனவே 3 முறை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதால், இதற்கு மேல் நீட்டிக்க முடியாது. வரும் 20ஆம் தேதிக்குள் பெயர் சேர்க்க முடியாதவர்கள், அடுத்து அக்டோபரில் திருத்தம் செய்யும் போது சேர்த்து கொள்ளலாம். வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. இந்த பணியில் அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பங்களை வாக்காளர்களுக்கு தருவதற்காக வரும் 17ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வரும் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சிறப்பு கிராம சபை கூட்டங்களில் வாக்காளர் பட்டியல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
கிராம சபை மூலம் திருத்தப் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். வாக்குச் சாவடி பட்டியல், வாக்காளர் பட்டியல் www.elections.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் வசதிக்காக மின்னணு பதிவு வசதி www.elections.tn.gov.in/eregistration இணைய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று நரேஷ்குப்தா கூறினார்.