''ஜனநாயக ரீதியில் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்'' மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடலூர் சிப்காட் பயனீர் தொழிற்சாலையில் பணி நிரந்தரமின்றி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தரம், தொழிலாளர் நலச் சட்டத்தை செயல்படுத்துவது, சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 11ஆம் தேதி தொழிற்சாலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்கள் மீது கடலூர் மாவட்ட தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுகுமாறன் மற்றும் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஏசுபாதம், ஆலை முதலாளிக்கு ஆதரவாக செயல்பட்டு சுகுமாறனை குறி வைத்து தாக்கியுள்ளார். அந்த தாக்குதலில் அவரது கண் பாதிக்கப்பட்டு பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக ரீதியில் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கண்பார்வை இழப்புக்கு காரணமான காவல்துறை துணை கண்காணிப்பாளரை தற்காலிக பணி நீக்கம் செய்து, அவரிடம் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்.
தொழிலாளர் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற்று, தொழிற்சங்கச் சட்டத்தை மதிக்காத ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வரதாஜன் கூறியுள்ளார்.