''தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எந்த அடிப்படையில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுகிறது'' என்று அரசுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''செட்டிநாடு மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழகமாக மாறிவிட்டதால் கடந்த ஆண்டு அவர்கள் அரசுக்கு வழங்கிய 83 இடங்கள் இந்த ஆண்டு இல்லை. இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தவும் தமிழக அரசு வேண்டுகோள் மட்டுமே விட முடியும்.
கடந்த ஆண்டு 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தடையில்லாச் சான்றிதழை தமிழக அரசு வழங்கியுள்ளது. அவற்றில், சவீதா பல்கலைக் கழகம், ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்றுக்கும் மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இதில், மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி அரசுக்கு இடங்கள் தந்துள்ளது. மற்ற இரண்டும் பல்கலைக் கழகங்கள் என்பதால் அரசுக்கு இடங்கள் தரவில்லை.
கற்பக விநாயகா மற்றும் சத்தியசாய் மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறுவது தனிக்காட்டு ராஜாவைப் போலத்தான் என்று ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளேன்.
மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு எந்த அடிப்படையில் தடையில்லாச் சான்றிதழ் வழங்குகிறது என்பது தெரியவில்லை. சான்றிதழ் வழங்கும்போது குறிப்பிட்ட இடங்களை அரசுக்கு வழங்க கட்டுப்பாடு ஏன் விதிக்கக் கூடாது?
தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கும்போது அரசுக்கு இடங்களை தந்துவிட்டு, பிறகு நிகர்நிலைப் பல்கலைக் கழகமாகி, ஏற்கனவே தந்த இடங்களையும் தர மறுக்கிறார்கள். இதற்கு அரசும் துணைபோவதன் ரகசியம் என்ன?
சில மாநிலங்களில் நிபந்தனையோடு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படுவது தமிழக அரசுக்கு மட்டும் தெரியாமல் போய் விட்டதா? முன்பு நான் சொன்னபோது உயர்கல்வித்துறை அமைச்சர் பல மறுப்பு அறிக்கைகளை வெளியிட்டார். இன்று, இழந்த இடங்களைப் பெற தனியார் முன் அரசே காத்துக் கிடப்பதன் மூலம் நான் சொன்னது சரியாகி விட்டது'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.